“பி.ஆர்.பி-யிடமும் வைகுண்டராஜனிடமும் வாங்கித் தின்னாதவர்கள் யார்?”
கடலூரில் வேட்பாளர்களை அறிவித்த கையோடு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டார் `நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாம் சென்றபோது, கட்சியின் வரைவு அறிக்கை தயாரிக்கும் வேலையில் இருந்தார்.
``சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டீர்கள். முதல்முறையாக திருநங்கை ஒருவர், உங்கள் கட்சி சார்பாக ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். இந்த யோசனை எப்படி வந்தது?’’
``இதற்கு எனத் தனியாக யோசிக்கவில்லை. அரசியல் தளத்தில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் மேலே வர வேண்டும் என விரும்புகிறோம். மண்பானை செய்பவர்கள், துணி வெளுப்பவர்கள் எல்லாம் இந்த மண்ணின் மூத்த குடிகள். அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் இல்லை. வேற்றுமொழி பேசுபவர்களுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை இவர்களுக்குக் கொடுக்கவில்லை. இந்தியா விடுதலை அடையும்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். இன்று மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டியும் அந்த எண்ணிக்கை அப்படியே தொடர்வது வேதனையானது. ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என இருப்பதை, மூன்று தொகுதிகளுக்கு ஓர் உறுப்பினர் என மாற்றும்படி கேட்கிறோம். இப்படிச் செய்தால் நாடாளுமன்றம் செல்லும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களின் பிரச்னையை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். மற்றவர்கள் பேசவேண்டிய அவசியம் இருக்காது. அதனால்தான் சேலத்தைச் சேர்ந்த தேவி என்கிற திருநங்கையை ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்தேன்.''
``தென்மாவட்டத்தைச் சேர்ந்த நீங்கள் கடலூரில் போட்டியிடப் போகிறீர்கள். அந்த மாவட்டத்தைத் தேர்வுசெய்ய என்ன காரணம்?’’
``தென்மாவட்டங்களில் நான் எங்கு போட்டியிட்டாலும், அங்கு சாதி என்ன என்ற கேள்வி எழும். `ஓட்டு வரும் என்பதற்காக நிற்கிறான்' என்பார்கள். தமிழர்களுக்கான பொதுத்தலைமை என்பது அரை நூற்றாண்டு காலமாக தமிழ்ச் சமூகத்தில் இல்லை. பெருந்தலைவர் காமராஜர் இந்தியத் தமிழராகத்தான் இருந்தார். தமிழ்நாட்டின் தமிழராக அவர் இல்லை. நான் முதலில் தமிழன்; பிறகுதான் இந்தியன். அந்த அடிப்படையில் என் இன முன்னோடிகள், அரசியலுக்கு வரும்போது எல்லாம் சாதி அடையாளத்தோடு பார்க்கப்பட்டார்கள். என் அய்யா மருத்துவர் ராமதாஸாக இருக்கட்டும், அண்ணன் திருமாவாக இருக்கட்டும், கொங்கு நாடு ஈஸ்வரன், சரத்குமார், கார்த்திக், ஜான் பாண்டியன் என என் இனம் சார்ந்த பிள்ளைகள் வரும்போது என்ன சாதி எனக் கேட்கிறார்கள். தமிழ் இனம் சாராத கருணாநிதியிடமோ, எம்.ஜி.ஆரிடமோ, ஜெயலலிதாவிடமோ என்ன சாதி என யாரும் கேட்பது இல்லை. அப்படிக் கேட்டிருந்தால் அவர்களால் வார்டு கவுன்சிலராகக்கூட வந்திருக்க முடியாது.
234 தொகுதிகளிலும் விஜயகாந்தால் வேட்பாளர்களை நிறுத்த முடியும். ஆனால், ராமதாஸ், திருமாவளவனால் அது முடியாது. அப்படியானால், தமிழர்களை தொகுதிக் கட்சிகளாகக் குறுக்கி அழுத்தியது இந்தத் திராவிடக் கட்சிகள்தான். முன்னோர்களின் படிப்பினையை முழுமையாகக் கண்டு உணர்ந்துவிட்டோம். எங்கு எல்லாம் என் இனம் இருக்கிறதோ, அங்கு எல்லாம் என் அரசியல் பரவவேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் நான் கடலூரில் போட்டியிடுகிறேன்.''
`` `தமிழர்கள், தமிழர்களாக இணைய வேண்டும்' என்கிறீர்கள். அப்படியானால் தமிழர்களிடம் மட்டும்தான் வாக்குக் கேட்பீர்களா?’’
``தமிழர் அல்லாதவர்கள் எனக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று நான் எப்போதுமே சொல்லவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்குமான அரசைத்தான் ஏற்படுத்த விரும்புகிறேன். இந்த மண் சார்ந்த மனிதன்தான் ஆள வேண்டும் என்கிறோம். இத்தனை ஆண்டுகாலமாக அந்த உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் தமிழர் நலனுக்காக இறுதிவரை போராடுவோம் எனச் சொல்கிறார்கள். தமிழர் நலனில் மிக முதன்மையான உரிமை என்பது, அவர் நிலத்தை அவரே ஆள்வதுதான். அந்த உரிமையை நீங்கள் என்னிடம் கொடுத்துவிட்டால், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை நிர்மாணம், மீத்தேன் வாயு பிரச்னை என எதுவுமே நடந்திருக்காதே? இந்தியாவில் இத்தனை மலைகள் இருக்கும்போது என் மலையை மட்டும் ஏன் வந்து குடைய வேண்டும்? தகப்பன் இல்லாத வீடுபோல, நல்ல தலைவன் இல்லாத நாடு தறிகெட்டுத்தான் போகும்.''
``தமிழர் என்ற முழக்கத்தை முன்வைப்பதால் மற்றவர்கள் வாக்கு உங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறீர்களா?’’
``என் இன விடுதலைக்கு, என் மக்களின் நலனுக்காக நான் போராடும்போது எனக்கு வலிமை கொடுக்கவேண்டிய தார்மீகக் கடமை, இங்கே வளமுடன் வாழும் மாற்று மொழிக்காரர் களுக்கு இருக்கிறது. பிறமொழியாளர்கள் வாக்கு எனக்கு வரவில்லை என்றால், தமிழர்களின் வாக்கும் அந்த மொழி பேசும் வேட்பாளர்களுக்குக் கிடைக்காது என்ற நிலை வரவேண்டும். சோனியாவை ஏன் பிரதமராக நாடாள அனுமதிக்கவில்லை? காரணம், அவர் வேறு தேசத்தவர். பிற தேசத்துக்காரர்கள் ஆளக் கூடாது என்பது தேசப்பற்று என்றால், என் நிலப்பரப்பை நான் ஆளாமல் வேறு ஒருவர் ஆள்வதை எதிர்ப்பது மட்டும் எப்படி பாசிசம் ஆகும்?''
``தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மை மக்கள் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள். உங்கள் பேச்சு அந்த மக்களிடையே கசப்புஉணர்வை ஏற்படுத்தாதா?
``இது எப்படி கசப்புஉணர்வை ஏற்படுத்தும்? இந்த மண்ணில் வாழ்கிற உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆள்கிற உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. என் வீட்டில் நான் வாழ வேண்டும் எனப் பேசுவதே இனவாதம் என்றால், நீங்கள்தான் உண்மையான இனவெறியர்கள். ஈழத்தில் ஐம்பதாயிரம் பேர் இறந்தார்களே... சொத்து, சுகத்துக்காகவா இறந்தார்கள்? என் இனம் அடிமைப்பட்டுப் போய்விடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துக்காக இறந்தார்கள். செம்மரக்கட்டை கடத்தப்போனார்கள் என இருபது பேரைச் சுட்டுக் கொன்றது சந்திரபாபு நாயுடு அரசு. கோதாவரி நதியில் குளிக்கப்போனவன் செத்துப்போய்விட்டான் என அதற்கு வருத்தம் தெரிவிக்கிற மோடி, இருபது பேர் இறந்ததற்குப் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நாதியற்றவன் தமிழன்.''
``தமிழர் என்ற வாதத்தைத் தீவிரமாக முன்வைக்கும்போது, நதிநீர் பங